கொங்கு வேளாள கவுண்டர்களில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் தெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈங்கூரில் காவிலுவர், சிங்களவர், மாவிலுவர், பூவிலுவர், வெள்ளை வேட்டுவன் ஆகிய இனத்தவர் வசித்து வந்தனர். அப்போது இவ்வூர் சோழ ஆட்சியின் கீழ் இருந்தது.
இந்த இனத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் வந்தனர். அவர்களை சமாளிக்க வழியில்லாமல் தவித்த சோழன், நான்கு இனத்தவர்களையும் அடக்குபவர்களுக்கு காணி நிலம் கொடுப்பதாக அறிவித்தான்.
தஞ்சையில் வசித்து வந்த ஈஞ்சன் குலத்தவர்கள் ரகுநாதசிங்கய்ய கவுண்டர் என்பவரை தளபதியாக கொண்டு அவர்களை அடக்கினர். இதற்கு பிரதிபலனாக ஈஞ்சன் குலத்தினர் 88 ஊர்களை காணியாக பெற்றனர்.
ஈங்கூரில் வந்து குடியேறிய ஈஞ்சன் குலத்தினருக்கு, மூவேந்தர்களின் எல்லையாக திகழ்ந்த மாயனூர் அருகே மதுக்கரையில் அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் குல தெய்வமாக விளங்கினார். செல்லாண்டியம்மன் அடுத்து பெருமாளை தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கினர்.

ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர். அப்போது, நிதிக்காப்பாளராக செயல்பட்ட பெரியவர், இளைப்பாறிய இடத்திலேயே பணமுடிப்பை மறந்து வைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தார்.
பல மைல்கள் நடந்து சென்ற பிறகு பணமுடிப்பு இல்லாததை உணர்ந்த ஈஞ்சன் குல மக்கள், முடிப்பைத் தேடி வந்த வழியே திரும்பி சென்றனர். கடைசியாக தங்கிய இடத்தில் பணமுடிப்பு அப்படியே இருப்பதை கண்டு ஈஞ்சன் குலத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பணமுடிப்பு அருகில் சென்று பார்த்தபோது அதில் நாகப்பாம்பு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்தது. இந்த பணமுடிப்பை காவல் காக்க தங்கள் குலத் தெய்வமான செல்லாண்டியம்மனே நாகமாக வந்தாள் என அவர்கள் எண்ணினர். தங்கள் குல அன்னைக்கு நாள்தோறும் பூஜை செய்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதுக்கரை செல்லாண்டியம்மனை, ஈங்கூரில் தம்பிராட்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
அருள்மிகு தம்பிராட்டியம்மன் கன்னியாகவும், தாயாகவும் இருந்து இந்த உலகத்தை கட்டிக்காக்கும் அன்னை சக்தி பல்வேறு வடிவங்களில் தோன்றி தம் மக்களை பேணிக்காத்து வருகிறாள். அருள்மிகு தம்பிராட்டியம்மன் ஈரோடு பெருந்துறை அருகே ஈங்கூரில் அருள்பாலிக்கிறாள்.
கன்னியாகவும், தாயாகவும் இருந்து இத்த உலகத்தை கட்டிக்காக்கும் அன்னை சக்தி பல்வேறு வடிவங்களில் தோன்றி தம் மக்களை பேணிக்காத்து வருகிறாள். ஈரோடு பெருந்துறை அருகே ஈங்கூரில் தம்பிராட்டியம்மன் என்ற பெயரில் அவள் அருள்பாலிக்கிறாள்.